உத்தரகாண்டில் நவ.2-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் முதலாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில மாதங்களாக இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தப் பொது முடக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் கடந்த ஜூலை மாதம் முதலாகப் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பள்ளிகளைப் பகுதி நேரமாகத் திறப்பதற்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது.
இதன்படி, சில மாநிலங்களில் செப்.21 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறிப்பாக, ஆந்திரா, அசாம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் ஆந்திரா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்தரகாண்டில் நவ.2-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வித்துறை அமைச்சர் அர்விந்த் பாண்டே கூறும்போது, ''மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக மொத்தம் 3,791 மேல்நிலைப் பள்ளிகள் நவ 2-ம் தேதி திறக்கப்படுகின்றன. மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வந்தால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர்'' என்று தெரிவித்தார்.