தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு:



தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு விலை குறைந்துள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தங்கம் விலை உச்சத்தை தொட்டது. சாதாரண மக்கள் நகை வாங்க முடியுமா என்ற அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இது நகை வாங்குவார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்படியே விலை உயர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. நவம்பர்மாதத்தில் இதே நிலை தான் நீடித்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு சவரன் 37,984, 24ம் தேதி 37,120, 25ம் தேதி 36,912க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் 4,613க்கும், சவரனுக்கு 8 குறைந்து ஒரு சவரன் 36,904க்கும் விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு 37 குறைந்து ஒரு கிராம் 4,576க்கும், சவரனுக்கு 296 குறைந்து ஒரு சவரன் 36,608க்கும் விற்கப்பட்டது. மாலையில் விலை சற்று அதிகரித்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,589க்கும், சவரனுக்கு 192 குறைந்து ஒரு சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,272 குறைந்துள்ளது. அதே நேரத்தில் 4 மாதத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் 6,616 அளவுக்கு குறைந்துள்ளது. இது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive