நிவர் புயல் கரையைக் கடந்து விட்டதால் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று (நவ. 25) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.
இந்நிலையில், பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த மாவட்டங்களில் மீண்டும் இன்று நண்பகல் 12 மணி முதல் பேருந்து சேவை தொடங்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (நவ. 26) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புயல், 25.11.2020 அன்று இரவு 11.00 மணி அளவில் மரக்காணம் - புதுச்சேரி இடையில் கரையைக் கடந்து விட்டதால், மேற்கூறிய மாவட்டங்களில் இன்று (நவ. 26) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment