மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற, 6 முதல் 12-ம் வகுப்பு வரை தாங்கள் படித்த அரசுப் பள்ளியின் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் 6 - 8, 9 - 10, 11 - 12 என நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை என வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கும் பட்சத்தில் 3 பள்ளிகளின் படித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அதேபோல இறுதியாக 12-ம் வகுப்புப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கையெழுத்து மற்றும் சீல் அவசியம்.
அதேபோல மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மை என உறுதி செய்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரும் கையொப்பமிட வேண்டும் என்ற் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு:
0 Comments:
Post a Comment