வரும் ஆண்டுகளிலாவது தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில், பிரதான அரசியல் கட்சிகளிடம் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மனு அளித்து வருகிறது.
திருச்சியில் நேற்று (டிச. 28) பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சகாயசதீஷ் உள்ளிட்டோர் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் எஸ்.சகாயசதீஷ் இன்று (டிச. 29) கூறியதாவது:
"2004-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உரிய கால இடைவெளியில் வழங்கப்பட்டு வந்த பணி மேம்பாடு, ஊதிய உயர்வு ஆகியவற்றை கிடப்பில் போடாமல் உடனடியாக வழங்க வேண்டும்.
இளையோர்-மூத்தோர் முரண்பாடுகளைக் களைந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதிய கணக்கீட்டின்போது வழங்கப்பட்ட ஊதியத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற விதிமீறல் நடவடிக்கைகளைக் களைந்து ஓய்வூதியச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.
அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தகுதி வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
ஊழலுக்கு இடம் அளிக்காமல் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பி, கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
சமூக நீதியை அழிக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்து, மாநில அரசின் கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.
தமிழ் மொழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து உயர் கல்வியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் மிக விரைவில் வரவுள்ள நிலையில், வரும் ஆண்டுகளிலாவது எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இணைக்க வலியுறுத்தி எங்கள் கோரிக்கை மனுவை அளித்து வருகிறோம்.
திமுகவைத் தொடர்ந்து அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட அனைத்து பிரதான கட்சிகளிடமும் மனு அளிக்க உள்ளோம். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்".
இவ்வாறு சகாயசதீஷ் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment