காந்திநகர்: முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு கோவிட் மையத்தில் பணி அளித்து தண்டனை வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமல் செய்தல் மற்றும் விதிமீறல்கள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமை நீதிபதி விக்ரம்நாத் மற்றும் நீதிபதி பர்திவாலா அடங்கிய அமர்வானது தாமாக முன்வந்து கடந்த வாரம் விசாரணை நடத்தியது. அப்போது எச்சரிக்கை மற்றும் அபராதம் ஆகியவற்றுக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு கோவிட் மையத்தில் பணி அளித்து தண்டனை வழங்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புதனன்று மாநில அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கமல் திரிவேதி, உயர் நீதிமன்ற உத்தரவினை அமல் செய்வது சிரமம் என்று கூறியதோடு, மேலும் ஒரு வாரம் அவகாசமும் கோரினார். ஆனால் அதனை மறுத்த அமர்வானது உடனடியாக இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிப்பதோடு கோவிட் சேவை மையத்தில், ஐந்து முதல் பதினான்கு நாட்கள் வரை பணி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது தினசரி குறைந்தபட்சம் 4 மணி முதல் 6 மணி நேரங்கள் வரை நடைபெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் மருத்துவம் தொடர்பு இல்லாமல் இடத்தை சுத்தப்படுத்துதல், பாத்திரங்களைத் தூய்மை செய்தல், சமையலில் உதவுதல், உணவு பரிமாறுதல் மற்றும் தகவல் சேகரிப்பு என்பதாக அமையலாம் என்றும் அந்த உத்தரவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.