2021ஆம் ஆண்டு ஜனவரியில் பள்ளிகளைத் திறக்கக்கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது
கரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
பள்ளிகள் மூடப்பட்டு பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சியளிக்கப்பட்டது.
இதனிடையே கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஒருசில மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கல்வி நிலையங்களும் ஒருசில மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன.
எனினும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.