BT Teachers Promotion - தகுதியானவர்களின் விவரங்களை கோரி பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்பப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
'’அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் அல்லது சிறுபான்மை மொழி வழி - அனைத்துப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ) பதவிக்கு, தற்போதைய நிலையில் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களின் விவரப் பட்டியலைத் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி, சம்பந்தப்பட்ட பிரிவு உதவியாளர் மூலம் இணை இயக்குநர் பிரிவுகளில், டிச.21 முதல் 30-ம் தேதி வரை, அந்தந்த மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேதிகளில் பாடவாரியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
பட்டியலில் பெயர் விடுபட்டதாகத் தெரிவித்து முறையீடு ஏதும் வரப்பெற்றால், அதற்குச் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பு ஆவார்’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...