தமிழகத்தில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பிப்., 1 முதல் பள்ளிகளை திறக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, நாளை மறுநாள் ஆலோசனை நடத்தி, முதல்வரின் ஒப்புதல் பெறப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, 2020 மார்ச் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
புதிய கல்வி ஆண்டு துவங்கினாலும், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடந்தன.இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும், 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இம்மாதம் 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. நான்கு நாட்களாக, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் முடிவுகள், 29ம் தேதி வெளியாக உள்ளன. இதையடுத்து, தொற்று எண்ணிக்கை குறைந்த அளவில் மட்டுமே இருந்தால், பிப்., 1 முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகளை நடத்தலாம் என, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, தலைமை செயலகத்தில், நாளை மறுதினம் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.'இந்த ஆலோசனையின் முடிவில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளை துவங்குவது குறித்து, முதல்வரிடம் ஒப்புதல் பெறுவதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
10, பிளஸ் 2 பொது தேர்வு தமிழக அரசு அனுமதிபத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் நேற்று பிறப்பித்த அரசாணை:தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு பணிகளை, உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, கூட்டமாக சேராத வகையில், தனித்தனியாக வரவழைத்து, விபரங்களை சேகரிக்க வேண்டும்; தேர்வுக்கான கட்டணத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஜன., 19ல் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்வு தொடர்பாக, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம், உறுதிமொழி படிவம் பெற வேண்டியுள்ளது.இதற்கும், தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. இது போன்ற நடைமுறைகளையும், நிர்வாக ரீதியான பணிகளையும், ஆசிரியர்களும், பணியாளர்களும் உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள, அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.