பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஜனவரி 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 2,56,000 க்கும் மேற்பட்டோர் குரூப் 1 தோ்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தனா். தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வினாத்தாளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், எனவே தேர்வர்களுக்கு இழப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது; தவறுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.