கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கருதுகிறது. எனினும், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள் பள்ளிகளை திறந்துள்ளதால் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து தமிழகத்தில் பெற்றோரிடம் 8ம் தேதி வரை கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனடிப்படையில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இன்று மாலையுடன் இந்த கூட்டம் முடிகிறது. கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்காக அந்தந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் அரசுப் பள்ளிகள், 1500 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 4 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. பெற்றோர் கருத்து தெரிவிக்க வசதியாக அச்சிட்ட படிவங்கள் சில பள்ளிகளில் வழங்கப்பட்டன. சில பள்ளிகளில் பெற்றோரிடம் கோரிக்கை கடிதங்களாக பெறப்பட்டன. பள்ளிகள் திறக்கலாம், வேண்டாம் என்பதை மட்டும் எழுதிக் கொடுக்கும் படி கேட்டு வாங்கினர். கருத்துகள் அடங்கிய படிவங்களை இரண்டு அட்டை பெட்டிகளில் ேபாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இன்று மாலையுடன் முடிவடையும் கருத்துகள் குறித்த படிவங்களை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். அவற்றை தொகுத்து சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைப்பார்கள்.
இந்நிலையில், நேற்று மாலை வரை பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்துகளின்படி சுமார் 70 சதவீதம் பெற்றோர், பள்ளிகளை திறக்கலாம் என்றும், 30 சதவீதம் பேர் பிள்ளைகளின் பாதுகாப்பு முக்கியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அவசியம் என்பதால், அந்த இரண்டு வகுப்புகளுக்கு மட்டும் 18ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கவும், 1 முதல் பிளஸ் 1 வகுப்புகளை பின்னர் திறக்கவும் கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கூடி ஆலோசிக்க உள்ளனர். இதில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பிறகு முதல்வர் தான் பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே மாதம் பிளஸ் 2 தேர்வு
பிளஸ் 2 பொதுத்தேர்வை மே மாதம் நடத்த அரசு பரிசீலித்து வருகிறது. அதற்குள் மாணவர்களை தயார் செய்ய வசதியாக பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளை குறைக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு, எழுத்து தேர்வு நடத்திய பிறகு செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிகிறது.