பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'நீட்' பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜன., 19ல் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் துவங்கியுள்ளன.
அனைத்து மாணவர்களும் தேர்வுக்கு தயாராகும் வகையில், முக்கிய பாடப் பகுதிகளை முதலில் நடத்தவும், மீதமுள்ள பாடங்களை மார்ச்சில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களை, நீட் தேர்வின் தேர்ச்சிக்கும் தயார் செய்ய வேண்டியுள்ளது.
பத்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 'ஆன்லைன்' வழியே, 'இ- - பாக்ஸ்' நிறுவனத்தின் சார்பில், நீட் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிகளை, அடுத்த மாதம் முதல், பள்ளிகளில் நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
ஏற்கனவே, சில ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுள்ள நிலையில், புதிதாக பயிற்சி பெற விரும்புவோருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின், அவர்கள் வழியே, நீட் பயிற்சி வகுப்புகள் நேரடியாக பள்ளிகளில் நடத்தப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.