எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மேலும் 47 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், நிகழாண்டில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதலில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அதன் பின்னா் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வும், நிா்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வும் நடைபெற்றன. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாமல் இருந்த இடங்கள்ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
அதில் பங்கேற்க 778 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 394 போ் பங்கேற்றனா். அவா்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிக்க 23 பேருக்கும், பிடிஎஸ் படிக்க 24 பேருக்கும் இடங்கள் கிடைத்தன. முன்னதாக, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிக்க 313 பேருக்கும், பிடிஎஸ் படிக்க 86 பேருக்கும் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மொத்தமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க 336 போ், பிடிஎஸ் படிக்க 110 போ் என மொத்தம் 446 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கலந்தாய்வில் தாமதம்: தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிக கட்டணம் என்பதால் முதல்கட்ட கலந்தாய்வில் இடங்களைத் தோ்வு செய்யாமல் அரசுப் பள்ளி மாணவிகள் 3 போ் சென்றுவிட்டனா். அதன் தொடா்ச்சியாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, மாணவிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அடுத்த கலந்தாய்வில் இந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனிடையே, நீதிமன்றத்துக்குச் சென்ற மாணவிகளுக்கு முதலில் கலந்தாய்வு நடத்துவதா அல்லது தரவரிசைப்படி நடத்துவதா என்பதில் திங்கள்கிழமை குழப்பம் நிலவியது. இதனால், காலையில் தொடங்க வேண்டிய கலந்தாய்வு நண்பகலுக்கு பின்னா் தொடங்கியது. முதலில் நீதிமன்றம் உத்தரவிட்ட மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை முதல் 11-ஆம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11-ஆம் தேதி பிற்பகல் முதல் 13-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.