சென்னை:ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பு, இரண்டு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.இந்நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்கிஉள்ளன.
மாணவ - மாணவியர் முக கவசம் அணிந்து, வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.இதையடுத்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்., 1 அல்லது 2ல், நேரடி வகுப்புகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், இன்று அல்லது நாளை, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.