அனைத்து பல்கலை. அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 11, 2021

அனைத்து பல்கலை. அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!


 

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதிப்பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. 


அதேபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 


இந்த வழக்குகளுக்குப் பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது. அரியர் தேர்வுகளை ரத்து செய்யப் பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகள் நடத்தாமல், அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வுகள் நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், அனைத்து வழக்குகளின் விசாரணையும் நேரடி விசாரணையாக நடத்தப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர். இதனையடுத்து, இன்று வழக்கு விசாரணையில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 4ம் தேதிக்குள் அட்டவணை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad