மாணவர்கள் பள்ளிக்கு வராததால் கட்டணம் வசூலிக்க முடியாத நிலைக்கு பள்ளிகள் தள்ளப்பட்டன. இதனால் பள்ளிகளில் ஆன்லைனில் பாடம் எடுத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை.மற்றொருபுறம் தனியார் பள்ளிகள் நிர்வாகங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கின்றன. கட்டணமே வசூலாகாத நிலையில் கட்டட வாடகை, வங்கி தவணை, இன்சூரன்ஸ், மின்கட்டணம், சொத்துவரி உட்பட பல்வேறு வரிகள் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தால் கடும் மனஉளைச்சலில் உள்ளன.அதே நேரம் நீதிமன்றம் உத்தரவுப்படி ஜன.,31ல் இரண்டாம் பருவத்துக்கான கட்டணம் செலுத்த கடைசி தேதி விதித்தும் பெரும்பாலான பெற்றோர் முதல் பருவத்திற்கான கட்டணம் கூட செலுத்தவில்லை. பள்ளிகள் திறக்காததால் கட்டணம் செலுத்துவதில் பெற்றோருக்கு ஆர்வம் இல்லை. தனியார் பள்ளிகள் என்ற கட்டமைப்பே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போயுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகிகள், சங்கத்தினர் கூறியதாவது:
அரசு கைகொடுக்க வேண்டும்
பழனியப்பன், பொது செயலாளர், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு, விழுப்புரம்: பள்ளிகள் திறக்கப்படாததால் பள்ளிகள் முடங்கும் நிலை உள்ளது. அதேநேரம் அரசு நடவடிக்கைகள் தனியார் பள்ளிகளுக்கு எதிராக அமைகிறது. நடப்பாண்டில் தனியார் பள்ளிகளால் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் இன்னும் முழுமையாக மாணவர்களுக்கு வினியோகிக்க முடியவில்லை. அதற்குள் அரசு வெப்சைட்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடப் புத்தகங்களின் 'பி.டி.எப்.,' பைல்கள் வெளியிட்டுள்ளது.
இதனால் பல தனியார் பள்ளிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. கட்டணம் நிலுவை உள்ள மாணவர்கள் நிர்வாக அனுமதியின்றி எமிஸ் மூலம் எளிதில் அரசு பள்ளிகளில் சேர்ந்து விடுகின்றனர். அவர்களிடம் கட்டண நிலுவையை வசூலிக்க முடிவதில்லை. மேலும் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு சலுகைகளாலும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 5100க்கும் மேல் தனியார் பள்ளிகளின் முன் டெபாசிட் பணம், அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு வழங்கிய தொகை, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்வாக பங்கீட்டு தொகை என ரூ.100 கோடிக்கும் மேல் உள்ளது. இதில் இருந்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் கொரோனா நிவாரணமாக அல்லது திரும்ப செலுத்தும் வகையில் முன் பணமாகவோ ஆசிரியர்களுக்கு வழங்கலாம். அல்லது சிறப்பு ஊதியம் அறிவிக்கலாம். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்.
கட்டணம் வசூலிப்பது சவாலாக உள்ளது
கயல்விழி, தாளாளர், பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் ஸ்கூல், வத்தலக்குண்டு:பள்ளி திறக்கப்படாத நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை மிக கவலையடைய செய்கிறது. அவர்கள் உடனடியாக மாற்று வேலை தேட முடியாது. நிர்வாகம் தரப்பில் கட்டணம் வசூலிப்பது சவாலாக உள்ளது. சில பள்ளிகளில் குறைந்த சம்பளம் கிடைக்கிறது. 40 சதவீதம் பெற்றோர் கூட கட்டணம் செலுத்தவில்லை.
நீதிமன்றம் உத்தரவிட்டும், பள்ளி நடக்காததால் நாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மனப்பான்மை உள்ளது.தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஏதாவது ஒரு வகையில் உதவிட வேண்டும். கல்வி கட்டணத்தை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையின் படிப்பாக பார்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் கூட ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் கடமையை மாணவர்களுக்காக செய்கின்றனர்.
அரசின் முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்
அபிநாத், உறுப்பினர், மேனேஜ்மென்ட்ஸ் பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன், மதுரை: ஒரு நல்ல கல்வி நிறுவனத்திற்கு உயிராக இருப்பது திறமையான ஆசிரியர்கள் தான். அவர்களை பாதுகாப்பது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு. கொரோனா பாதிப்பிலும் பல தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் நலன் காக்கின்றன. இச்சூழ்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு அரசு நியாயமாக வழங்க வேண்டிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நியாயமாக வசூலிக்க வேண்டிய கட்டணத்தை வசூலிப்பதில் கூட பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
நல்ல சம்பளம் கொடுத்தால் தான் தரமான ஆசிரியர்கள் கிடைப்பார்கள். அவர்களால் தான் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடியும். இதை பெற்றோர் புரிந்து கொண்டு ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் கல்விக் கட்டணத்தை தானாக செலுத்த முன்வரவேண்டும். கொரோனா காலங்களில் தனியார் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் அரசும் கை கொடுக்க வேண்டும்.
கட்டணங்களிலிருந்து விலக்கு
கல்வாரி தியாகராஜன், தமிழ்நாடு இளம்மழலையர் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர், மதுரை :கோவிட் சூழலால் பள்ளிகளை நிரந்தரமாக மூடும் நிலை உருவாகியுள்ளது. குழந்தைகள் வராத போதும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியிருக்கிறது. மழலையர் பள்ளிகளை பொறுத்தவரையில் பெண்கள் தான் நடத்துகின்றனர். கட்டணம் வசூலிக்க முடியாத நிலையில் பள்ளிகளை சொந்த நிதியிலிருந்து நடத்தும் நிலையுள்ளது. எனவே தமிழக அரசு தொழில் துறையினருக்கு உதவுவது போல பள்ளிகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தலுக்கான கட்டணங்களிலிருந்து சில ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும்.
பெற்றோரின் கடமை
பத்மா, பெற்றோர், மதுரை: கொரோனா பேரிடரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நம் குழந்தைகள் கல்வி பாதிக்காமல் இருக்க அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கூட தொடர்ந்து பாடம் நடத்துகின்றனர். அவர்களுக்கு கைமாறு செய்ய பெற்றோர்கள் தாமாக முன்வந்து கல்விக் கட்டணங்களை செலுத்த வேண்டும். முழு கட்டணத்தையும் செலுத்தினால் தான் நம் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
துணை நிற்கவேண்டும்
விஜிதா, நிலக்கோட்டை: கொரோனா பாதிப்பு துவக்கத்தில் விடுமுறையில் சில வாரங்கள் குழந்தைகள் வீடுகளில் இருந்தபோது வழக்கமான வாழ்க்கை முறையில் அவர்களிடம் பெரும் மாற்றம் தெரிந்தது. அதை மாற்றும் வகையிலும் கல்வி, கற்பித்தலை தொடர்ந்து பின்பற்றும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் உதவுகின்றன. கல்வி கட்டணத்தை பெற்றோர் செலுத்தவில்லை என்றால் ஆன்லைன் வகுப்புகளுக்கும் இடையூறு ஏற்படும். பல பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலாகவில்லை எனக் கூறி ஆசிரியர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இது அவர்களுக்கு மட்டும் பாதிப்பில்லை அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தான் பாதிப்பு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைத்து பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் துணை நிற்க வேண்டும்.
கஷ்ட காலத்தில் கைகொடுக்க வேண்டும்
சுபாஷினி, மதுரை: இச்சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களின் நிலையை புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர் கல்வி கட்டணத்தை செலுத்தினால் தான் நிர்வாகம் அவர்களுக்கு சம்பளம் வழங்கும். பள்ளி நிர்வாகங்களும் பல சிரமங்களை சந்திக்கின்றன. முடிந்த வரை கல்வி கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த பெற்றோர் முன்வர வேண்டும். இது கஷ்டமான காலத்தில் ஆசிரியர்களுக்கு செய்யும் கைமாறாக பெற்றோர் நினைத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் நன்றாக இருந்தால் தான் நம் குழந்தைகளின் கல்வியும் நன்றாக இருக்கும் என்பதை பெற்றோரும், அரசும் நினைக்க வேண்டும்.