சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாக்களிக்க சிறப்பு வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசியர் கழகம் வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் அ.மாயவன், திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த மக்களவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 4.36 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 38,000 பேருக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு அனுப்பப்படவில்லை. வரப் பெற்ற அஞ்சல் வாக்குச்சீட்டுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் (Gazetted Officer) கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு சுமார் 26,000 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இவ்வாறு, கடந்த மக்களவைத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் 63 ஆயிரம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குரிமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லாததே இதற்குக் காரணம்.
வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபடவுள்ளனர். மக்களவைத் தேர்தலைப்போல் இந்தத் தேர்தலில் அவர்களது வாக்குரிமை பறிபோய்விடக் கூடாது.
எனவே, சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் யோசனை தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் அனைவரும் வாக்களிக்க காவல் துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதன்படி, தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது தேர்தல் முடிந்த பிறகோ தொகுதி வாரியாக சிறப்பு வாக்குப்பதிவு மையத்தை ஏற்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஜனநாயக கடமைகளில் ஒன்றான தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேறு தகுந்த மாற்று யோசனை இருந்தாலும், அதைச் செயல்படுத்த வேண்டும். தேர்தலில் வாக்களிக்கும் உரிமை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.
மேலும், வாக்குப்பதிவு மையத்தில் பணியில் ஈடுபடுவோர் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பணியில் ஈடுபட தேர்வு செய்யப்பட்டு காத்திருக்க வைக்கப்படுவோருக்கும் குடிநீர், மின் விசிறி, கழிப்பிடம், தங்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.பக்தவத்சலம், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சேதுசெல்வம், மாநிலச் செயலாளர் வா.கோபிநாதன், திருச்சி மாவட்டத் தலைவர் வே.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.