காலண்டரில் இருக்கும் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் எதற்காக இருக்கிறது தெரியுமா???💫🌹
நம் வீட்டு காலண்டரில் இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும், ஒரு குறிப்புகள் மூலம் அம்பு குறியீடு இருக்கும். இந்த அம்பு குறியீடு எதற்காக குறிப்பிடப்பட்டு இருக்கிறது? என்று பலருக்கும் தெரிவதில்லை. இந்தக் குறியீடு மேல் நோக்கி இருந்தால், மேல்நோக்கு நாள் என்றும், கீழ் நோக்கி இருந்தால் கீழ்நோக்கு நாள் என்றும், இருபுறமும் சமமாக இருந்தால், சமநோக்கு நாள் என்றும் குறிப்பிட்டு கூறப்படுகிறது. இந்த குறியீடு அந்தந்த நாட்களில் வரும் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடு தெரிந்து கொண்டு சில காரியங்களை நாம் செய்யும் பொழுது அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும்.
மேல்நோக்கு நாள் என்பது உத்திரம், உத்திராடம், ரோகினி, திருவாதிரை, பூசம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, திருவோணம் போன்ற 9 நட்சத்திரங்கள் கொண்ட நாட்களை குறிக்கிறது. பொதுவாக சுப காரியங்கள் செய்ய மேல்நோக்கு நாளைத் தேர்ந்தெடுப்பது ஜோதிடர்களின் வழக்கம். மேல்நோக்கு நாள் நல்ல அதிர்ஷ்டமான நாளாக அமையும். இந்த நாளில் மேல் நோக்கி நடக்கக் கூடிய நல்ல விஷயங்களை செய்வது மிகவும் நல்லது.
அதாவது மேல் நோக்கி வளரும் மரம், செடி, கொடி போன்ற தாவரங்களை வளர்ப்பதும், மதில் சுவர் கட்டுவது, கட்டிடம் எழுப்புவது, பயிர் விதைப்பது என்று வானை நோக்கி செய்யக் கூடிய காரியங்களை செய்வது அதிர்ஷ்டம் தரும். மேலும் சுப காரியங்கள் செய்வது, உத்தியோகம் சார்ந்த நல்ல விஷயங்களை செயலாற்றுவது, புதிதாக வேலைக்கு சேருவது, புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம்.
அது போல் வியாபாரத்தில் இருப்பவர்கள் வளரக்கூடிய விஷயங்களை செய்வதும் நன்று. வீடு, மனை வாங்குவது வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவது, விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவது, பத்திரப்பதிவு செய்வது போன்ற செயல்களை செய்யலாம். சுருக்கமாக சொல்லப் போனால் வளரக்கூடிய, மற்றும் மேலும் வளர வேண்டிய விஷயங்களை செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.
கீழ்நோக்கு நாள் என்பது கீழ்நோக்கி நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை செய்யலாம். கிருத்திகை, பரணி, ஆயில்யம், விசாகம், பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், மூலம் போன்ற ஒன்பது நட்சத்திரங்களை குறிப்பது தான் கீழ்நோக்கு நாட்கள். கீழ்நோக்கு நாட்களில் சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு அடியில் வளரும் கிழங்கு வகைகள், செடிகள் நடுவது, கிணறு தோண்டுவது, போர்வெல் அமைப்பது, கீழ்நிலை தொட்டிகளை உருவாக்குவது போன்ற விஷயங்களை செய்வதன் மூலம் தடையில்லாத நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
சமநோக்கு நாள் என்பது மிருகசீரிஷம், அஸ்தம், அஸ்வினி, சுவாதி, புனர்பூசம், சித்திரை, ரேவதி, கேட்டை, அனுஷம் ஆகிய 9 நட்சத்திரங்களை கொண்ட நாட்களை குறிக்கிறது. இதில் சமமாக செய்யக் கூடிய சில விஷயங்களை செய்வதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம். அப்படி என்னென்ன விஷயங்கள் செய்யலாம்? சமமாக இருக்கும் சாலைகள் அமைப்பது, மற்றும் அதன் மீது ஓடும் வாகனங்கள் வாங்குவது, புதிதாக வீடு கட்டுபவர்கள் தளம் அமைப்பது, விவசாய நிலத்தில் சமமாக உழவு செய்வது போன்ற விஷயங்களை செய்தால் யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
எந்த ஒரு விஷயத்தையும் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள்களை விட நாளும், கோளும் நமக்கு நன்மைகளை அதிகமாக செய்யும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும், நாள், நட்சத்திரம் பார்ப்பவர்களும் தவறாமல் இந்த நாட்களை மனதில் நிறுத்தி செயல்களை செய்யும் பொழுது அதற்குரிய பலன்களையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாமும் இந்த நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவோம், நன்மைகள் பெறுவோம்.
Post Top Ad
Friday, January 8, 2021
Home
Unlabelled
காலண்டரில் இருக்கும் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் எதற்காக இருக்கிறது தெரியுமா???