சமூக வலைதளங்களைக் கண்காணிக்கக் கோரி வழக்கு: முகநூல், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சமூக வலைதளங்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் விதிகளை உருவாக்கக் கோரிய வழக்கில் முகநூல், யூடியூப், கூகுள் நிறுவனங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''சென்னையில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அந்த யூடியூப் சேனலுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் அந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சமூக வலைதளங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கி வருகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3-வது இடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா பரவல் காரணமாகத் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால் மாணவ, மாணவிகள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் குறுக்கிடுவதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
யூடியூப், முகநூல் வீடியோக்கள், இணையதளத் தொடர்கள், குறும்படங்கள், பிராங்க் ஷோ ஆகியன தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பப்படுகின்றன. யூடியூப், முகநூலில் நேரலை வசதியும் உள்ளன. உரிமம் பெற்ற சில செய்தி சேனல்கள் தவிர்த்துப் பெரும்பாலான யூடியூப் சேனல்களில் உண்மைக்குப் புறம்பானவையே நேரலை செய்யப்படுகின்றன.
பாகிஸ்தான், சீனாவில் யூடியூப் சேனல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், கருத்துகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். எனவே, சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத் தரப்பில், ''யூடியூப், முகநூல், கூகுள் மற்றும் சமூக வலைதளங்கள் தணிக்கை வசதியைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாகப் புகார்கள் வந்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக யூடியூப், முகநூல், கூகுள் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.