நாடு முழுவதும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர்.
அதற்காக தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட யுசர் நெம்பர் மற்றும் பாஸ்வேர்டை அந்த இன்டர்நெட் மைய நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளனர்.
இதனால் அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதை தவறாகப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஆன்லைன் மூலம் தேசிய உதவித்தொகை திட்டத்தில் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களை கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது.
அதன்படி அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் யுசர்நெம்பர் மற்றும் பார்ஸ்வேர்ட் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால், அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அனைத்து தலைமையாசிரியர்களும் விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் திட்டமான சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாநிலங்களில் தனியார் இன்டர்நெட் மையங்களில் போலியாக மாணவர்கள் சேர்த்து உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக புகார்கள் சென்றுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி வாரியாக மாணவர்களின் விவரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இதுவரை அதுபோன்று எந்த இடத்திலும் போலியாக மாணவர்கள் சேர்ந்துள்ளது கண்டுப்பிடிக்கப்படவில்லை. அதற்கான அறிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.