அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜி., கல்லுாரிகளில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., இன்ஜி., படிப்புகளில், 2021-22ம் கல்வியாண்டில் சேருவதற்கான, பொது நுழைவுத் தேர்வுக்கு(டான்செட்-2021) விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜன., 19ம் தேதி முதல் துவங்குகிறது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பிப்., 12. மார்ச் 20 மற்றும், 21ம் தேதிகளில் தேர்வு நடக்கிறது.
எம்.பி.ஏ., பட்டபடிப்புக்கு கல்வி தகுதியாக மாணவர்கள் தங்கள் இளங்கலை படிப்பில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.சி.ஏ., பட்டப்படிப்பு தேர்வர்கள் தங்கள் இளங்கலை படிப்பில், கணிதத்தை கட்டாயப்பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., (லேட்ரல் என்ட்ரி) மாணவர்கள் பி.சி.ஏ., பி.எஸ்சி., போன்ற இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்ச்., தேர்வர்கள் இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வில், 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு தவறான விடைக்கும், 3ல், ஒரு பங்கு மதிப்பெண் கழிக்கப்படும்.