அரசு தொடக்கப் பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இது தொடர்பாகத் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:
”ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பிப்.15 முதல் மார்ச் 16-ம் தேதி வரை 30 நாட்கள் பெங்களூருவில் ஆங்கில மொழிப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. தனியார் பயிற்சி நிறுவனம் மூலமாக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்குத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை அனுப்புமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.எனவே, ஆங்கிலப் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாகத் தங்கள் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியரை மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து ஜன.29-ம் தேதிக்குள் இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்தப் பயிற்சியில் ஏற்கெனவே கலந்து கொண்டவர்கள், புதிய பட்டியலில் இடம்பெறக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிப் பட்டியல் தயாரிக்க, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.