புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் நாளை (ஜனவரி 6-ம் தேதி) முதல் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் தொடர்ச்சியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, டிச.17-ம் தேதி முதல் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 6-ம் தேதி முதல் புதுவையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் யாசம் லட்சுமி நாராயணசாமி ரெட்டி, புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ''இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளின் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும். ஆசிரியர்களும், மாணவர்களும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் தலைமையில் உள்ளவர்கள் சொந்தமாக வெப்பநிலையைக் கண்டறியும் கருவி, சானிடைசர் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வகுப்பில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால், அவர்களை இரு பிரிவாகப் பிரித்து வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும். தேவைக்கேற்ப கற்பித்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டும். வகுப்பறையில் இரண்டு மாணவர்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் உடல் நலம், உளவியல், நல்வாழ்வுக்கான உதவி மையம் அமைத்து, ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். கல்லூரி முதல்வர் தலைமையில் சிறு குழு அமைத்து, வாராந்திர அறிக்கையை இயக்குநருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.