2021-ம் ஆண்டுக்கான சிஏ தேர்வுகளை எழுத அனுமதிக்கும் ஹால் டிக்கெட்டை இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.
2020-ம் ஆண்டுக்கான தேர்வுகள் இரு முறை தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற்றன. இந்நிலையில், 2021 சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெற உள்ளன.
நவம்பர்/ டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வை எழுத முடியாத மாணவர்கள் இந்த முறை தேர்வெழுத, இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்றுப் பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய https://icaiexam.icai.org/ என்ற முகவரியை க்ளிக் செய்யலாம்.
இந்தியாவில் சிஏ படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.