காரைக்குடி அழகப்பா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் எம்.பில்.,சேர்க்கை ரத்து செய்யப்பட்டதால் ஆண்டுக்கு 500 மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை மற்றும் அதன் கீழ் ராமநாதபுரம், சிவகங்கையில் 50 இணைப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இங்கு சேரும் மாணவர்களில் 73 சதவீதம் பேர் கிராமங்களை சேர்ந்தவர்கள். அதிலும் பெண்கள் அதிகம். இப்பல்கலையில் கடந்த கல்வி ஆண்டு வரை (2019--2020) 20 க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து எம்.பில்., பட்டம் பெற்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 500 மாணவர்கள் எம்.பில்., முடித்து சென்றனர். தேசிய கல்வி கொள்கையை காரணமாக கூறி, காரைக்குடி அழகப்பா பல்கலை நிர்வாகம் இக்கல்வி ஆண்டு (2020--2021) முதல் எம்.பில்., மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது. ஆனால் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்துார் பல்கலையில் இக்கல்வி ஆண்டிலும் எம்.பில்., சேர்க்கை நடக்கிறது. முனைவர் பட்டம் பெற, எம்.பில்., படிப்பு கட்டாயம் என்பதால், பின்தங்கிய இவ்விரு மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் எம்.பில்.,சேர்கின்றனர். ஆனால், காரைக்குடி அழகப்பா பல்கலை மட்டுமே இப்படிப்பிற்கான சேர்க்கையை ரத்து செய்துவிட்டது. இதனால் கிராமப்புற மாணவர்கள் மதுரை, திருச்சி, கோவை, சென்னை பல்கலையை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.டாக்டர் பட்டத்திற்கு நுழைவு தேர்வுகாரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் என்.ராஜேந்திரன் கூறியதாவது: தேசிய கல்வி கொள்கையில் பி.எச்டி., சேர நுழைவு தேர்வு கட்டாயமானதால், எம்.பில்., பட்டம் அவசியம் இல்லை. இதன் காரணமாகவே எம்.பில்., மாணவர் சேர்க்கை நடத்தவில்லை. தேசிய பல்கலை தர நிர்ணய (நாக்- கமிட்டி) குழுவும் ஆய்வின் போது பி.எச்டி., முடித்தவர்களை தான் அதிகம் கேட்கின்றனர். எம்.பில்., முடித்தவர்கள் பற்றி கேட்பதில்லை. எம்.பில்., முடித்தால் வேலைவாய்ப்பிலும் பயன் இல்லை. வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்வியை வழங்க தான் திட்டமிடுகிறோம், என்றார்