அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எம்.டெக்., பயோடெக்னாலஜி”, “எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி” ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது. முதலில் 12 எம்.டெக்., மாணவர்களுடன் தொடங்கப்பட்டு, தற்போது 45 மாணவர்கள் வரை படிக்குமளவிற்கு இத்துறை இயங்கி வருகிறது. இதுவரை அகில இந்தியத் தேர்வு மூலம், இந்த பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்த முறை அண்ணா பல்கலைக்கழகமே மாணவர் சேர்க்கையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் - தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசோ, “மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் மாத ஊக்கத் தொகையாக வழங்கப்படும் 12500 ரூபாயை ரத்து செய்து விடுவோம்” என்று, இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அடம்பிடித்து - அராஜகம் செய்துள்ளது. மருத்துவக் கனவைச் சீர்குலைப்பது போல் - உயிரி தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கனவுகளையும் சிதைக்கும் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனைக்குரியது. எனவே, தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான தனது பிடிவாதத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட்டு - மேற்கண்ட எம்.டெக்., படிப்புகளுக்கும் தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டணி வைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசுடன் பேசி, 45 மாணவர்களின் எதிர்காலத்தைக் கூடப் பாதுகாக்க முடியாமல் - இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையே இல்லை என்று அறிவித்திருப்பதைத் திரும்பப் பெற்று - 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் உள்ள மேற்கொண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Home »
» அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க வலியுறுத்தல்
0 Comments:
Post a Comment