தமிழகத்தில் 2017- 2018 கல்வி ஆண்டு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்கக்கோரிய மனுவுக்கு அரசு திட்ட செயலாக்கத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த காவுதீன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு 2011 முதல் இலவசமாக மடிக்கணிணி வழங்கி வருகிறது. இதற்காக அரசு 9.12 லட்சம் இலவச மடிக்கணினி வாங்கியுள்ளளது.
இந்த மடிக்கணிணி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 2017-2018 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு இதுவரை இலவச மடிக்கணிணி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் 2018- 2019 முதல் 2020- 2021 கல்வி ஆண்டு வரை பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2017-2018 கல்வி ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்காததால் அந்த மாணவர்கள் கரோனா காலத்தில் இணையதள கல்வி பயில மிகவும் சிரமப்பப்பட்டனர்.
எனவே 2017-2018 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இலவசமாக மடிக்கணிணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.அனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக அரசு திட்ட செயலாக்கத்துறை செயலர் பதிலளிக் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.