1.தொடர் தற்செயல் விடுப்பு இல்லை.
2.மத விடுப்பு இல்லை.
3.தீபாவளி முன்பணம் ₹.10,000 இல்லை , பொங்கல் போனஸ் ₹.1,000 சிறப்பு அரசாணை வெளியிட்டால் மட்டுமே உண்டு மற்றபடி இல்லை.
4.ஊதிய உயர்வு இல்லை.
5.தனியார் நிருவனங்களுக்கு உத்தரவிடும் அரசாங்கம் 1761 பேருக்கு EPF/ ESI வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வது இல்லை.
6.மருத்துவ காப்பீடு இல்லை.
7.பணிவரண்முறை கிடையாது.
8.வங்கி கணக்கில் ஊதியம் இல்லை.
9.வங்கி லோன் இல்லை.
10.பணியாளர் (Staff Identity Card) அடையாள இல்லை.
11.பணிமாறுதல் இல்லை / பணிச்சான்று கூட அளிப்பது இல்லை.
12.ஊர்திப்படி ₹.1000 மாற்றுத்திறனுடைய சிறப்பு பயிற்றுநர்களுக்கு இல்லை.
13.பள்ளி மற்றும் பி.ஆர்.சி அலுவலகம் சனிக்கிழமை விடுமுறை நாட்கள் என்ற போதும் கூட வீட்டுப்பயிற்சி செல்ல நிர்பந்தம்.
14.பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார வள மையத்தில் பொறுப்பு மேற்பார்வையாளர் என்ற இரட்டை தலைமை முறையால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் நிலவி வருகிறது.
15.கடந்த 10 ஆண்டுகளில் 25 பேர் பணிக்காலத்தில் இறந்துள்ளனர் ஆனால் இழப்பீடு வழங்க வில்லை பலரது குடும்பங்கள் ஏழ்மையில் வாடுகிறது.
சேவைப்பணி தொண்டுள்ளம் கொண்ட எங்களுக்கு மட்டுமே தொடர்ந்து இல்லை இல்லை இல்லை என்ற பதில் பேரிடியாகவும் அதிர்ச்சியாகவும் வருகிறது.
இதுகுறித்து சிறப்பு பயிற்றுநர் ஜெ.அருண்குமார் கூறுகையில் கிருஷ்ணகிரியில் மாண்புமிகு கல்விதுறை அமைச்சர் திரு.கே.செங்கோட்டையன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் ஆகியோருடன் பேசி ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்தார். தமிழக அரசு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்து சலுகைகள் வழங்காமல் புறக்கணிப்பு செய்து வருகிறது. இதனால் ஒரே பணித்தளத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை தேவையில்லாத மனக்கசப்புகளை வேதனைகளை அனுதினமும் ஏற்படுத்துகிறது. பணிஆணை குறித்து Tamilnadu CM Special Cell Petition Reply வலைதளத்தில் கேட்டமைக்கு ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் பணிஆணை வழங்கியுள்ளது. எனவே மீண்டுமாய் இன்னொரு பணிஆணை வழங்க வேண்டியதில்லை என்ற மழுப்பலான தகவல்களை சமாளிப்பை பதிலாக வழங்கியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. அரசு துறைகளில் சாதாரண பணியாளர்களுக்கு கூட பணிஅங்கீகாரம் என்ற மதிப்பை வழங்கும்போது மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என சேவைப்பணி செய்து வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு குறைந்தபட்சம் தொகுப்பூதிய தற்காலிக பணிஆணை மற்றும் ஊதிய உயர்வு , அடிப்படை பணிச்சலுகைகள் கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது மிகவும் மனவேதனையை ஏற்படுகிறது.பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் ஆகிய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர், ஆளுநர், கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித் துறை செயலாளர் , மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், தலைமை செயலாளர் , நிதித்துறை அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்.. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உமிழ்நீர் கட்டுப்படுத்தும் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம், அதீத துறுதுறு செயல்பாடுகள் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய போற்றுதலுக்குரிய சிறப்பான பணி காரணமாக பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.. பிற மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மாத ஊதியம் டெல்லியில் 41750 , ஆந்திராவில் 21000 , மகாராஸ்டிராவில் 30759 , கர்நாடகாவில் 20000 , புதுச்சேரியில் 20000 , கேரளாவில் 27000 , ஹாரியானாவில் 42409 , ஆனால் தமிழ்நாட்டில் 16000 மட்டுமே வழங்கப்படுகிறது என்பது வருத்தத்திற்கும் வேதனைக்குரியது.. நாடு முழுவதும் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒருங்கிணைந்த கல்வி - (SAMAGRA SHIKSHA) என்ற பெயரில் ஒரே மாதிரியான செயல்பாடுகள் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளதென்பது பாரபட்சமான நடவடிக்கை சட்டவிரோத நடவடிக்கையாக உள்ளது. ஆந்திரா , கேரளா , டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களை மாநில அரசு பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை தமிழகஅரசு பணிநிரந்தரம் செய்ய 79 கோடி தேவையென நிதித்துறை மூலமாக கணக்கிடப்பட்டுள்ளது.இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது.. எனவே 1761 சிறப்பு பயிற்றுநர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய 45 கோடி நிதியினை மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதுமானது. பள்ளிக்கல்வி துறையில் மற்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி ஆணை மற்றும் அடிப்படை பணிச்சலுகைகள் வழங்கி வரும் தமிழக அரசு கடந்த 23 ஆண்டுகளாக (1998 to 2021) லட்சக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கருணையோடு, தொண்டுள்ளத்தோடு சொற்ப ஊதியத்தில் எவ்வித அடிப்படை பணிச்சலுகையின்றி பணித்தளத்தில் உரிய அங்கீகாரம் கூட இல்லாமல் தற்காலிகமாக சிறப்பு பயிற்றுநர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். தமிழக அரசு 23 ஆண்டு பணிக்காலத்தை கனிவோடும் கருணையோடும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுகோள் வைக்கின்றோம். தமிழக முதல்வர் எடப்பாடியார் அய்யா அவர்கள் உடனடியாக அரசு ஆணை பிறப்பித்து சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி நிரந்தர ஆணை அல்லது குறைந்த பட்சம் தொகுப்பூதிய தற்காலிக பணிஆணை , ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை பணிச்சலுகைகள் அளித்து வாழ்வாதாரம் காத்திட வேண்டும். இவ்வாறு தமிழ் நாடு - ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் (TN-SS-SEADAS) சார்பில் மாநில பொதுச்செயலாளர் டி.பாபு தமிழக அரசுக்கு கோரிக்கை மனு விடுத்துள்ளார். மேலும் அம்மா அழைப்பு மையம் 1100 மூலமாக கோரிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது.