சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், அரசு பள்ளி மாணவர்கள், 62 பேர் இடங்கள் பெற்றனர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், ஐந்து அரசு மருத்துவ கல்லுாரிகளில், 330 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 49 இடங்கள் போக, 281 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல, 25 தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 1,550 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 237 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 882 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 491 இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளில், 2020 -- 21ம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு, அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,310 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1,301 பேர்; அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு, 119 பேர் தகுதி பெற்றனர்.இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், அரும்பாக்கம் சித்தா மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.
சிறப்பு பிரிவினர், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் கவுன்சிலிங் முடிந்த பின், பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கி நடைபெற்று வருகிறது.இது குறித்து, மாணவர் சேர்க்கை தேர்வு குழு செயலர் மலர்விழி கூறியதாவது:இந்த கவுன்சிலிங்கில், சிறப்பு பிரிவில், 16 பேர்; அரசு பள்ளி மாணவர்கள், 62 பேர் கல்லுாரிகளில் சேர அனுமதி கடிதம் பெற்றனர்.
தொடர்ந்து அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு கவுன்சிலிங் வரும், 20ம் தேதி வரை நடைபெறும்.அதைத்தொடர்ந்து, 22ம் தேதி முதல், 24ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.