பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாதிரியை வெளியிடும்படி, பள்ளி கல்விதுறைக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பணிகளை அரசின் தேர்வுத்துறை மேற்கொள்கிறது.
தேர்வுக்கான பாட திட்டத்தை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், தேர்வுக்கான வினாத்தாளை அரசு தேர்வுத்துறை தான் தயாரிக்கிறது. இதன் காரணமாக, பாட திட்டம் ஒரு மாதிரியாகவும், வினாத்தாள் முறை வேறு மாதிரியாகவும் இருக்கிறது.
இரண்டு துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிடும் வினாத்தாள் முறைக்கும், பொதுத்தேர்வு வினாத்தாள் முறைக்கும், முரண்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளதால், வினாத்தாள் எப்படி இருக்கும் என, மாணவ, மாணவியரும்; ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும், கொரோனா காரணமாக பாடத் திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் வெளியிடப்பட்ட பகுதிகளில் பழைய முறையிலான இரண்டாம் தாள் பகுதிகள் முற்றிலும் இல்லை. ஆனால் அவை மட்டுமே மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெற வழி வகுக்கும். உதாரணமாக Note Making, Letter Writing, Picture Comprehensive போன்றவை. ஆனால் அவை தற்போது உண்டா இல்லையா என்ற குழப்பம் ஆசிரியர்கள் உட்பட்ட அனைவருக்கும் உள்ளது. எனவே, பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற மாதிரியை வெளியிட வேண்டும்; அதில், எந்த பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும் அல்லது இடம் பெறாது என்ற விபரங்களை பள்ளிகளுக்கு அனுப்பி, மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.