சென்னை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து தொடர்பான அரசாணை, வெளியிடப்பட்டது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 ஜனவரியில், 10 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதில், பங்கேற்றவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என, சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, வேலைநிறுத்தம் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக, முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டார்.இதற்கான அரசாணையை, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் நேற்று பிறப்பித்தார். அதில், கூறியிருப்பதாவது:கடந்த, 2019 ஜனவரியில் நடந்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள், உடனடியாக கைவிடப்படுகின்றன.
இதன் காரணமாக தண்டனை வழங்கி, இறுதி ஆணைகள் வெளியிடப்பட்டிருந்தால், அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், அந்த நடவடிக்கை தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.