பரிக்ஷா பே சார்ச்சா 2021' நிகழ்ச்சியின்போது உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடுவார்
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டில், "நமது துணிச்சல் மிக்க தேர்வெழுதும் போர்வீரர்கள், தங்களது தேர்விற்குத் தயாராகி வரும் வேளையில், உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் காணொலி வாயிலாக 'பரிக்ஷா பே சார்ச்சா 2021' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மன உளைச்சல் அல்லாமல், புன்னகையுடன் தேர்வை எதிர் கொள்ளலாம், வாருங்கள்!
பல்வேறு கோரிக்கைகளுக்கேற்ப, 'பரிக்ஷா பே சார்ச்சா 2021' நிகழ்ச்சியில் பெற்றோரும், ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள். பொதுவாக தீவிரமான தலைப்பாக இருந்தபோதும், வேடிக்கைகள் நிறைந்த விவாதமாக இது அமையும். எனது மாணவ நண்பர்கள், அவர்களது அற்புதமான பெற்றோர்கள், கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் பெருமளவில் 'பரிக்ஷா பே சார்ச்சா 2021' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நான்காவது ஆண்டாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் கலந்துரையாடும் 'பரிக்ஷா பே சர்ச்சா' 2021 நிகழ்ச்சிக்கான முன்பதிவு துவங்கி இருப்பதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்:
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கலந்துரையாடலின்போது தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான முறையில் பிரதமர் நேரலையில் பதிலளிப்பார். இந்த வருட நிகழ்ச்சி, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது.
https://innovateindia.mygov.in/ppc-2021/ என்ற தளத்தின் மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வினால் ஏற்படும் மன உளைச்சல் சம்பந்தமான கேள்விகளை எழுப்பலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.
இதே தளத்தில் நடைபெறும் இணையதள போட்டிகளின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்கள் தங்களது மாநிலம்/ யூனியன் பிரதேசத்தில் இருந்து காணொலி வாயிலாக கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள். 2021 மார்ச் 14-ஆம் தேதி வரை இந்த இணையதளத்தின் வாயிலாக போட்டிகளில் பங்கேற்கலாம்