நாடு முழுவதும் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. தற்போது 1½ லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி விட்டது இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களும் பணிக்கு வர மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதுவரை துணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்து கொண்டிருந்த நிலையில், இனி அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ‘அனைத்து மட்டத்திலான அரசு ஊழியர்களும், அனைத்து பணி நாட்களிலும் எந்தவித விலக்கும் இன்றி பணிக்கு வரவேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. எனினும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இதைப்போல அலுவலகங்களில் அனைத்து துறை கேன்டீன்களும் திறக்கவும் அனுமதி அளித்து மற்றொரு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.