தேசிய விருது பெற்ற ஆசிரியரின் திட்டம் அமல் - ஒவ்வொரு அரசுப் பள்ளி சார்பிலும் ஒரு குளம் தத்தெடுப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 4, 2021

தேசிய விருது பெற்ற ஆசிரியரின் திட்டம் அமல் - ஒவ்வொரு அரசுப் பள்ளி சார்பிலும் ஒரு குளம் தத்தெடுப்பு


தேசிய விருது பெற்ற ஆசிரியரின் திட்டமான ஒவ்வொரு அரசுப் பள்ளி சார்பிலும் ஒரு குளத்தைத் தத்தெடுக்கும் திட்டம் புதுச்சேரியில் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் 2020-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்றவர். இவர் நீர்நிலைகளைப் பாதுகாக்க பல திட்டங்களை மாணவர்களுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளார். அவரது பணிகள் பலவும் நீர் முக்கியத்துவம் கருதியதாகவே இருந்தன. இதற்கிடையே ஒவ்வொரு அரசுப் பள்ளியும் ஒரு குளத்தைத் தத்தெடுத்து, பராமரிக்கும் திட்டத்தை ஆசிரியர் ராஜ்குமார் முன்மொழிந்தார். அதன்படி அவரது திட்டம் புதுச்சேரியில் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் கிரண்பேடி கூறுகையில், "தேசிய விருது பெற்ற ஆசிரியர் ராஜ்குமாரின் திட்டமான ஒவ்வொரு அரசுப் பள்ளியும் ஒரு குளத்தைத் தத்தெடுத்துப் பராமரிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. புதுச்சேரி சாரத்திலுள்ள எஸ்ஆர்எஸ் அரசுப் பள்ளி அருகே புதிதாக ஒரு குளம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் மழைநீர் சேகரிக்க முடியும். இதில் பள்ளியும், அப்பகுதியுள்ள சங்கத்தினரும் இணைந்து பணியாற்றுவார்கள். குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளும் இதில் இணையலாம்" என்று குறிப்பிட்டார். இதுபற்றி ஆசிரியர் ராஜ்குமாரிடம் கேட்டதற்கு, "கடந்த 2018-ம் ஆண்டு காட்டேரிக்குப்பம் அரசுப் பள்ளிக் குழந்தைகள், பள்ளிகள் ஒவ்வொன்றும் குளத்தைப் பராமரிப்பது பற்றி திட்டம் தயாரித்து காட்சிப்படுத்தினர். அதன்படி நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளில் குளத்தைப் பராமரிப்பதால் மழைநீரைச் சேகரிக்க முடியும். இதனால் சுற்றுச்சூழல் மேம்படும். குளத்தை சுற்றி நடைபாதை, மரங்கள் என இயற்கைச் சூழல் மேம்படும். அத்திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

கல்வித்துறை தரப்பில், "குழந்தைகள் தாங்கள் தத்தெடுக்கும் குளத்தைச் சுற்றி மரம் நடுவது, பட்டாம்பூச்சி பூங்கா உருவாக்குவது, குளத்தில் மீன்கள் வளர்ப்பது என சுற்றுச்சூழலை முழுமையாகக் கற்க முடியும். இதன்மூலம் நீர்நிலைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் குழந்தைகள் அறிய முடியும்" என்று குறிப்பிட்டனர்.

Post Top Ad