“வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை” -மத்திய அரசு விரைவில் கொண்டுவர திட்டம்!
கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தியபோதே ‘இனி வேலை நேரம் 12 நேரமாக அதிகரிக்கக்கூடும்’ என்ற பேச்சு அங்கும், இங்குமாக ஒலித்து வந்தது. இந்நிலையில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
“தற்போது நடைமுறையில் உள்ளதுபோல வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அது அப்படியே தொடர்கிறது. ஆனால் வேலை நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை என்றால் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும். அதுவே 10 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 5 நாட்களும், 8 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்யவேண்டி இருக்கும். இதில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் எந்தவித நிர்பந்தமும் இல்லை. மாறி வரும் பணி தொடர்பான கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இது மூன்று ஷிப்டு வேலையை இரண்டே ஷிப்டாக மாற்றும் வேலை எனவும், இதனால் வேலைவாய்ப்புகள் பறிபோகலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை 24-ஆக குறைக்க மத்திய அரசு திட்டம்?
மத்திய, மாநில அரசுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ நடத்தும் தொழில், வணிகம் மற்றும் சேவை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்கள் என்கிறோம். அவற்றில் அரசின் பங்கு குறைந்தது 51 சதவிகிதம் இருக்கும்.
நாடு சுதந்திரமடைந்த பின்கடந்த 1951ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆக இருந்த நிலையில், 2019ல் 348 ஆக அதிகரித்திருந்தது. அதே ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் 25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அரசின் பெரும்பாலான முக்கிய திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதில், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தான் முக்கிய பங்கும் வகிக்கிறது.
நஷ்டத்தில் செயல்படும் முக்கியத்துவமற்ற சில பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதோடு, பெரும்பாலானவற்றை தனியார்மயமாக்குவதன் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
குறிப்பிட்ட நான்கு முக்கிய துறைகள் மட்டுமே தன் வசம் வைத்திருக்கவும், பிற துறைகளில் இருந்து வெளியேறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை, 2 டஜன்கள் அளவிற்கு குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை பொதுத்துறை நிறுவனங்களை வைத்துக் கொள்ளலாம் என மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக்கின் பரிந்துரையின் பேரில், அடுத்து விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை முழுமையாக தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, தனியார்மயமாக்கல் மூலம் சர்வதேச அளவில் முதலீட்டை ஈர்ப்பதில் மத்திய உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.