இந்நிலையில் அரசின் அறிவிப்புக்கு மாறாக 10-ம் வகுப்புக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பிரத்யேகபொதுத்தேர்வு நடத்த தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 9, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுரத்து செய்யப்பட்டதில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுஇல்லாமல் தேர்ச்சி செய்யப்படுவதால் உயர்கல்வி சேர்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக பிளஸ் 1 சேர்க்கையில் பாடப்பிரிவுகளை பிரித்து தருவதில் குளறுபடிகள் வரும். மேலும், சிபிஎஸ்இ உட்பட இதர வாரியங்களின் பள்ளிக்கு மாற விரும்பும்போது மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை இணையவழியிலேயே பெரும்பாலான பாடங்களை நடத்தி முடித்துவிட்டோம். பள்ளிகள் திறக்கப்பட்டபின் மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகளே நடந்து வந்தன. இந்தச் சூழலில் அரசு தேர்வை ரத்து செய்தது ஏற்புடையதல்ல.
ஏனெனில், பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுதான் பாடத்திட்டக்குறைப்பு உட்பட சில மாற்றங்களைகல்வித்துறை மேற்கொண்டது. ஆனால், தாமத அறிவிப்பால் தற்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு தேர்வு ரத்து அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதற்கு கல்வித்துறை மறுத்து விட்டது. இதையடுத்து மண்டலவாரியாக தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து 10-ம் வகுப்புக்கு மட்டும் பிரத்யேக பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களிடம் தேர்வுக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். சட்டப்பேரவை தேர்தல் முடிந்தபின் ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். சென்னை உட்பட வடக்குமண்டலத்தில் மட்டும் 350-க்கும்மேற்பட்ட பள்ளிகளில் ஏப். 12 முதல் 24-ம் தேதி தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘பெரும்பாலான பெற்றோர் நடப்பு ஆண்டுக்கான கல்விகட்டணத்தை இன்னும் முழுமையாகச் செலுத்தவில்லை. தற்போதுபொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் நேரடியாக அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சிபெற்று விடுகின்றனர். இதனால் கல்விக் கட்டணத்தை வசூல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியாக தேர்வு நடத்தும் போதுஅதை காரணமாக வைத்து கட்டணத்தை எளிதில் வசூலித்துவிட முடியும். கட்டணம் செலுத்தாவிட்டால் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி தரப்படாது. எனவே, பெற்றோரும் முழுத் தொகையை செலுத்திவிடுவார்கள்’’ என்றனர்.