தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோரில் 9 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. அதன்பின்பு கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி, ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி, பட்டுக்கோட்டை மற்றும் ஆலத்தூர் அரசுப் பள்ளிகள், தஞ்சாவூர் எம்.கே.எம்.சாலையில் உள்ள தனியார் பள்ளி, தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் மாணவ - மாணவியருக்குக் கரோனா ஏற்பட்டது.
தொடர்ந்து எம்.கே.எம். சாலையில் உள்ள தனியார் பள்ளி, மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி, தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம், கும்பகோணம் தனியார் கல்லூரி திருவையாறு அரசுக் கல்லூரி, பட்டுக்கோட்டை தனியார் பள்ளி, தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அரசுப் பள்ளி ஆகியவற்றில் கரோனா ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மாணவிகள், மற்றும் மாரியம்மன் கோவில் பள்ளி மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
15-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று, திருப்பனந்தாள் கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவர்கள் மற்றும் திருவையாறு அமல்ராஜ் தனியார் பள்ளியில் 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 11 பள்ளிகளை சேர்ந்த 180 மாணக்கர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 கல்லூரிகளைச் சேர்ந்த 18 கல்லூரி மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளி மாணவர்களில் பாதிப்பு எண்ணிக்கை 187 ஆகவும் கல்லூரி மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மாணவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.