வேலை நேரத்தை வாரத்தில் 4 நாட்களாக குறைத்தால் என்ன ஆகும்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, March 28, 2021

வேலை நேரத்தை வாரத்தில் 4 நாட்களாக குறைத்தால் என்ன ஆகும்?


 

ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. தற்போது வாரத்துக்கு 6 நாட்கள் அல்லது 5 நாட்கள் வேலை நாட்கள் எனும் முறை நடைமுறையில் இருக்கிறது. தொழிலாளர் சட்டத்தில் புதிய விதிகளைச் சேர்த்து வந்து 4 நாட்கள் மட்டுமே வேலை, அந்த 4 நாட்களும் நாள்தோறும் 12 மணி நேரம் வேலை நேரம் என்ற திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அனுமதிக்கப்படும். இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.தொழிலாளர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்மதத்துடன், வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கலாம். ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வரம்பை தாண்டக்கூடாது. மீதமுள்ள நேரத்தை ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை நிறுவனங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு நிர்பந்தம் செய்யாது. விரும்பினால், நிறுவனங்கள் இந்த விதிகளைச் செயல்படுத்திக் கொள்ளலாம்.இந்தியாவில் மட்டும்தான் இந்த திட்டம் பரிசீலனை செய்யப்படுகிறதா? என்றால் இல்லை. 


இதற்கு முன்னோடியாக நியூசிலாந்தில் பெர்பெச்சுவல் கார்டியன் என்ற நிறுவனம், 2018-ல் தனது 240 ஊழியர்களிடையே இந்த நான்கு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தியது. வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால், நிறுவனத்தின் உற்பத்தித்திறன், உற்பத்தி அளவு மற்றும் நோக்கம் ஆகியவற்றில் எத்தகைய தாக்கம் ஏற்படும்? என்பதை கண்டறிவதற்காக 8 வாரங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. ஊதியம், விடுமுறை உரிமை மற்றும் சலுகைகள் எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஊழியர்களின் வேலை நேரம் வாரத்தில் 37.5 மணி நேரத்திலிருந்து 30 ஆக குறைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஊழியர்களின் மன அழுத்தம் 16 சதவீதம் குறைந்துள்ளது.

 வேலை-வாழ்க்கை சமநிலை 44 சதவீதம் மேம்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் அர்ப்பணிப்பு, உற்சாகம், அதிகாரம் மற்றும் தலைமைப்பண்பு அனைத்தும் மேம்பட்டன. அதேசமயம் நிறுவனத்தில் உற்பத்தித்திறனும் குறையவில்லை. இதன் காரணமாக இந்தத் திட்டத்தை நிரந்தரமாக அந்த நிறுவனம் நீட்டித்திருக்கிறது. ஊழியர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையில் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.இதேபோல் பிரிட்டனில் ஒரு சில நிறுவனங்கள் மற்றும் ஜப்பானில் மைக்ரோசாப்ட் ஆகியவை வாரத்தில் நான்கு நாள் வேலை என்ற திட்டத்தை பரிசோதனை செய்தன. 

ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை, மாறுபட்ட சூழல் உள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் தாங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வரை வேலை செய்வதாக உணர்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைத்திறன், முன்னுதாரணமாக இருக்க விருப்பம் மற்றும் கூடுதல் வேலை செய்து பணம் ஈட்டும் விருப்பம் ஆகியவற்றில் தொழிலாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். எனினும், பண ஆதாயங்கள் ஆதிக்கம் செலுத்தும் காரணியாக உள்ளது என 34 சதவீதம் தொழிலாளர்கள் கூறி உள்ளனர். கூடுதல் நேரம் வேலை செய்வதன்மூலம், பதவி உயர்வு அல்லது போனஸ் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று 34 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, இந்த நான்கு நாள் வேலைத் திட்டமானது, தொழிலாளர்களின் வாழ்க்கைக்கும் வேலைக்குமான பிணைப்பை பாதிக்காத வகையில் இருந்தால் மகிழ்ச்சியே.

Source Maalaimalar

Post Top Ad