கடந்த மாதம் நடந்த ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதில் தேசிய அளவில் 6 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், குறிப்பிட்ட சில தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ளபிஇ, பிடெக், பிஆர்க், பி.பிளான்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ எனப்படும் கூட்டுநுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது, மெயின் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 தேர்வுகளை உள்ளடக்கியது.
என்ஐடி, ஐஐஐடி-யில் சேரஜேஇஇ மெயின் தேர்வு போதும்.ஆனால், ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தேர்ச்சி அவசியம். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜேஇஇ தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. கடந்த ஆண்டு வரை ஜனவரி, ஏப்ரல் என ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த இத்தேர்வு 2021-ம் ஆண்டு முதல் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே என 4 முறை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதலாவது ஜேஇஇ மெயின் தேர்வு பிப். 23 முதல் 26-ம் தேதிவரை இணையவழியில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்வை நாடு முழுவதும் 5.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை என்டிஏ 8-ம் தேதி இரவு வெளியிட்டது. இதில் 6 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அடுத்த தேர்வுக்கு விண்ணப்பம்
அடுத்த ஜேஇஇ மெயின் தேர்வு மார்ச் 15 முதல் 18-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைனில் (www.jeemain.nta.ac.in) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மாணவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, 3-வது ஜேஇஇ மெயின் தேர்வு ஏப்ரல் 27 முதல் 30-ம் தேதி வரையும், 4-வது மற்றும் இறுதி மெயின் தேர்வு மே 24 முதல் 28-ம் தேதி வரையும் நடக்க உள்ளது.