தமிழகத்தில், 9, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தேர்வு இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பால், அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.தமிழகத்தில், கொரோனா சூழல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. படிப்படியான தளர்வுக்கு பின், கடந்த ஜன., 19ல், பிளஸ் 2, 10ம் வகுப்புகளுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பின், 9, பிளஸ் 1 வகுப்புகளும் துவக்கப்பட்டன.
இந்த நான்கு வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தியே, தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிலை இருந்ததால், துவக்கத்தில் குறைவாக இருந்த மாணவர் எண்ணிக்கை, 100 சதவீதத்தை தொட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன், 9, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, நடப்பாண்டு தேர்வு நடத்தப்பட மாட்டாது; அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், உற்சாகமடைந்த மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பெற்றோர் கூலி வேலைக்கு செல்வதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருவதையோ, படிப்பதையோ மேற்பார்வை செய்ய முடிவதில்லை. தேர்ச்சி பெற வேண்டுமே என்ற எண்ணத்தில், பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். தற்போது அனைவரும் தேர்ச்சி என, கிளைமாக்ஸ் தெரிந்துவிட்டது.
இதனால், வகுப்பறைகளில் நடத்தப்படும் பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை. அதே போல், வருகை பதிவும் கட்டாயமில்லை என்பதால், பள்ளிக்கு வருவதையே வீண் என, மாணவர்கள் கருத தொடங்கியுள்ளனர். இதனால், நாளுக்கு நாள் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.