ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய பட்டியல் தயாரிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, March 9, 2021

ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய பட்டியல் தயாரிப்பு.


 


தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், விருப்ப மனு கொடுத்த ஆசிரியர்களின் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வில் விருப்ப மனு அளித்து, நேர்காணலுக்கு சென்ற வேளாண் துறை பெண் அலுவலர் திலகவதியை, வேளாண் துறையில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் ஊழியர்களில் யாராவது, தேர்தலில் போட்டியிட, கட்சிகளிடம் விருப்ப மனு அளித்துள்ளனரா என, விசாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர், தி.மு.க.,வில், 'சீட்' கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், தனி நபர்கள், தி.மு.க., நிர்வாகிகளின் உறவினர்கள் என, பல தரப்பட்ட ஆசிரியர்கள், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் பெயர்; அவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளின் பட்டியல், தேர்தல் செலவுக்கு தேவைப்படும் பொருளாதாரத்தின் பின்னணி குறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் உளவுத்துறை தரப்பில் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.


இந்த விபரங்களின் அடிப்படையில், அரசு வேலையில் இருந்து கொண்டே விதிகளை மீறி அரசியலில் ஈடுபட்டதாக, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad