இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படாது; மாறாக திறனறிதல் தேர்வு நடத்தப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்து உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் இந்தியாவின் கல்வி மேம்பாட்டுக்கான கூட்டமைப்பு சார்பில், புதிய கல்வி கொள்கை மற்றும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.இந்த நிகழ்வில், ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே பேசியதாவது:
புதிய கல்வி கொள்கை வழியே, மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கும். எட்டாம் வகுப்புக்கு பின், உயர்கல்விக்கு முந்தைய நான்கு ஆண்டு படிப்பு அறிமுகமாகும்.தற்போதைய ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு பதில், இந்த படிப்பை மாணவர்கள் படிக்க வேண்டும். அதன்பின், விரும்பும் உயர்கல்வியில் சேரலாம்.இன்ஜினியரிங் படிப்பில் சேர, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை கட்டாயமாக படிக்க வேண்டும். இந்த பாடங்களை பள்ளிகளில் படிக்காத வேறு பிரிவு மாணவர்களும், இன்ஜினியரிங் சேரலாம்.அதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற குறுகிய கால படிப்பாக, கட்டாயம் முடிக்க வேண்டும்.கல்லுாரிகள் தங்கள் கட்டடங்களை, பல்வகை படிப்புகளுக்கும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு பல்கலை மற்றும் கல்லுாரியும், மற்ற பல்கலை மற்றும் கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, மாணவர்களுக்கு படிப்பை நடத்தலாம். வெளிநாட்டு பல்கலைகள் இந்தியாவிலும், இந்திய பல்கலைகள் வெளிநாட்டிலும் ஒப்பந்தம் செய்து, கல்வி வழங்கலாம்.தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் அறிவியல் படிப்பு கள் நடத்தப்படும்.
அனைத்து பாடங்களுக்கும் PG TRB STUDY MATERIALS&MODEL QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.
இதற்கான புத்தகங்கள், அந்தந்த மொழிகளில் தயாராகி வருகின்றன. அறிவியல் ரீதியான வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்திலும், மற்றவை மாநில மொழிகளிலும் இருக்கும்.இன்ஜினியரிங் படிப்பவர்கள், கலை, அறிவியல் படிப்புக்கும்; கலை, அறிவியல் படிப்போர், இன்ஜினியரிங் படிப்புக்கும், இடையில் மாறிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.இன்ஜினியரிங், அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை படிப்புகளுக்கும், நுழைவு தேர்வு நடத்தப்படாது. அதேநேரம், மாணவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 'ஆப்டிடியூட்' திறன் அறிதல் தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்வில், வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர் செல்வம், இந்திய கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு தலைவர் மலர்விழி, அவினாசிலிங்கம் மகளிர்பல்கலை வேந்தர் தியாகராஜன். பல்வேறு பல்கலைகளின் துணைவேந்தர்கள், இன்ஜினியரிங் கல்லுாரி தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர்.