முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளி வயது வரம்பு சலுகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் டிஆர்பி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப். 11ல் வெளியானது. 40 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எஸ்சி-எஸ்டி உள்ளிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு சலுகை வழங்கப்படவில்லை. எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வயது வரம்பு சலுகையை வழங்கி நியமனம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுவிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.