புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா கொல்லுயிரி பரவ தொடங்கியதன் விளைவாக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கு தொடர்ந்ததன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. தற்போது, கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் நீங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 8ம் தேதி முதல் பள்ளிகளும், கல்லூரிகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. தற்போது அப்பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுயற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முழு நேரமும் வழக்கம் போல செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு அறிவித்துள்ளார்.
வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12ம் வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும் என அறிவித்துள்ளார். இதனிடையே 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு தேர்தலுக்கு பிறகு தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.