கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் முதல் முறையாக 21-நாள் தொடர் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலை இல்லாததால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றனர். நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பின்னர் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து பொது முடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமையுடன் (மார்ச் 25) ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஆனால், வேலையின்மை பிரச்னை இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது நாடு.
இது தொடர்பாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) வெளியிட்டுள்ள தரவுகள் விவரம்:
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டில் வேலையின்மை விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் இது 8.8 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் 6.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக 23.5 சதவீதமாக உயர்ந்தது. இது மே மாதத்தில் 21.7 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் ஜூன் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கியது. ஜூனில் 10.2 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாகவும் பதிவாகியது. ஆகஸ்டில் மீண்டும் 8.3 சதவீதமாக உயர்ந்து, செப்டம்பரில் 6.7 சதவீதமாக இருந்தது. அக்டோபரில் மீண்டும் 7 சதவீதமாக உயர்ந்து, நவம்பரில் 6.5 சதவீதமாக குறைந்தது. டிசம்பரில் வேலையின்மை விகிதம் 9.1 சதவீதமாகவும், ஜனவரியில் 6.5 சதவீதமாகவும் பதிவாகியது என்று அந்தத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
நிபுணர்கள் கருத்து: வேலையின்மை சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை சிஎம்ஐஇ தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டு மக்களில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தத் துறையில் சிறப்பான செயல்பாட்டைக் காண முடிகிறது. அதே நேரத்தில் நகர்ப்புற மற்றும் தொழிலகப் பகுதிகளில் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது.
புதிய பணி நியமனங்களை மேற்கொள்வதில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், வேலையின்மை பிரச்னையில் சீரான முன்னேற்றத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. பல்வேறு திட்டங்களின் கீழ் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு விரும்புகிறது. இந்த நோக்கத்தை அடைய நெருக்கமான கண்காணிப்பு மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட செயல்பாடு தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலையின்மை சதவீதம் 2020
பிப்ரவரி - 7.8
மார்ச் - 8.8
ஏப்ரல் - 23.5
மே - 21.7
ஜன் - 10.2
ஜூலை - 7.4
ஆகஸ்ட் - 8.3
செப்டம்பர் - 6.7
அக்டோபர் - 7.0
நவம்பர் - 6.5
டிசம்பர் - 9.1
2021
ஜனவரி - 6.5
பிப்ரவரி - 6.9
(இந்திய பொருளாதார
கண்காணிப்பு மைய தரவு)