திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கு தனி மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
62 தலைப்புகளின் கீழ் 505 வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 182 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளதாவது:
1983 முதல் 2007-ம் ஆண்டு வரை மாநில சுயாட்சி- மாநில உறவுகள் குறித்து நான்கு குழுக்கள் அளித்த பரிந்துரைகளை முழுமையான விவாதங்களுக்கு உட்படுத்தி மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள கல்வித்துறையை மீண்டும் மாநில அரசு பட்டியலில் இடம்பெற செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி- மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால் திமுக அதனை முற்றிலும் நிராகரிக்கிறது.
தமிழகத்திற்கெனத் தனியே மாநில கல்வி கொள்கை உருவாக்கப்படும். இதற்கெனக் கல்வியாளர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்படும். இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.