சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி 10ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. கொரோனா தொற்றானது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சேலம் மாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பில் தேறிய மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 1 ஆண்டுகளாகவே பள்ளிகள் இயங்கவில்லை. கொரோனா தொற்றின் 2ம் அலையானது மார்ச் மாதத்தில் இருந்து அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரேநாளில் மட்டும் 12,600க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்திலும் நேற்று ஒரேநாளில் 501 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசானது 11ம் வகுப்பு மாணவர்கள் வரை ஆல் பாஸ் செய்து அறிவித்திருக்கிறது. மேலும் பள்ளிகளை திறக்கக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில், சேலம் மாநகரில் 4 ரோடு பகுதியில் உள்ள சிறுமலர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுத வரவழைக்கப்பட்டுள்ளனர்.
2 தினங்களுக்கு முன்பு தொலைபேசி மூலமாக அவர்களது பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் 11ம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 11ம் வகுப்புக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் வரவழைக்கப்பட்டு தேர்வு வினாத்தாளும் வழங்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
பிறகு தேர்வு எழுத வந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மீண்டும் திருப்பி அனுப்பியது. கொரோனா தொற்றுக்கு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலையில், சேலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவு தேர்வு வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.