நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இவர்களுக்கான இணையதள முன்பதிவு நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் நேரடியாக தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மே 1 முதல் தடுப்பூசி போடப்பட உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்கனவே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே, முதல் டோஸ் போட்டவர்களுக்கு இன்னும் 2வது டோஸ் கிடைக்கவில்லை. 18-45 வயதுகாரர்களுக்கும் தடுப்பூசி போடத் தொடங்கினால், தடுப்பூசியின் சப்ளையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆல்லைனில் முன்பதிவு செய்து இருந்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களுக்கோ, மருந்துவமனைகளுக்கோ இவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி போட மாட்டார்கள்.