புதுடில்லி: 'கொரோனா வைரஸ் நெருக்கடியால், உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடக்கூடும்' என்ற தகவல், ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இந்நிலையில், இந்த கொரோனா நெருக்கடியால், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், பள்ளி படிப்பை கைவிடக்கூடும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவிலும், ஏராளமான ஏழைக் குழந்தைகள், பள்ளிக்கு மீண்டும் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.'ஆன்லைன்'கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தமுடியாமல், பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடப்பதால், அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி, ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், நிதிச் சுமையில் தள்ளாடும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக, சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
0 Comments:
Post a Comment