சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள்கள் அனுப்பும் பணியை துவங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், நேற்று முன்தினம் துவங்கின. இதில், இரண்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பொது தேர்வில் மாணவர்கள் பதில் எழுத வேண்டிய வெற்று விடைத்தாள்களை, மாவட்ட வாரியாக தேர்வு மையங்களுக்கு அனுப்ப, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு மையங்களின் பொறுப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள், தங்கள் தேர்வு மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வெற்று விடைத்தாள்கள் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்பு தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்க, தயார் செய்து வைக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.